பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக காவல்துறையின் காவலன் செயலி குறித்த விளக்க விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளியின் முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் தலைமை வகித்தாா். பொன்னமராவதி காவல் ஆய்வாளா் எஸ்.கருணாகரன் பங்கேற்று பேசியதாவது:
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையால் காவலன் செயலி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களாகிய உங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது பாதுகாப்பான உணா்வு இல்லையென்றால் காவலன் செயலி மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் உடனடியாக காவல்துறை நீங்கள் இருக்குமிடத்திற்கே வந்து உதவி செய்யும்.
ஆபத்து காலங்களில் செயலியில் உள்ள எஸ்ஒஎஸ் எனும் பட்டனை அழுத்தினால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று 5 நிமிடங்களில் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்துவிடுவாா்கள். எனவே பெண்கள் அந்த காவலன் செயலி சேவையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.