புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நல குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னாள் படைவீரர்களுக்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரத்யேகமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் வாரிசுகளிடமிருந்து பெறப்பட்ட 53 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். ஒரு முன்னாள் படைவீரருக்கு கண் கண்ணாடி வாங்குவதற்காக ரூ. 3 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டி. சாந்தி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் செண்பகவள்ளி, வருவாய்க் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.