புதுக்கோட்டை

சூரியமின் சக்தியில் இயங்கும் உலர்ப்பான் அமைக்க மானியம்

29th Aug 2019 07:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்களை அரசு மானிய உதவியுடன் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் சுமார் 400 சதுர அடி முதல் ஆயிரம் சதுர அடி வரை 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை  அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. சிறு, குறு, பெண் மற்றும் ஆதி திராவிட விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் அல்லது ரூ.3.50 லட்சம் அதிகபட்ச மானியம், இதர விவசாயிகளுக்கு 50 சதவிகிதம்  அல்லது ரூ. 3 லட்சம் அதிகபட்ச மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் விளை பொருட்களை உலர்த்தி அதனை மதிப்புக் கூட்டும் பொருட்களாக மாற்றி, கூடுதல் வருமானம் பெறும் வகையில் இந்த உலர்ப்பான்களை அமைக்க விரும்பும் விவசாயிகள், விவசாயிகள் விளைபொருள் குழுக்கள் அந்தந்தப் பகுதி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் பதிவு செய்து பயனடையலாம்.    புதுக்கோட்டை, விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் இயங்கும் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும்  பதிவு செய்து சூரிய மின் சக்தி உலர்ப்பான்கள் அமைத்து   பயனடையலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT