பொன்னமராவதியில் திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில், 14, 17, 19 வயதுக்குள்பட்ட பிரிவினருக்கான தடகளப் போட்டிகள், செஸ், கேரம், கைப்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில், திருமயம் குறுவட்ட அளவிலான 45 பள்ளிகளைச் சேர்ந்த 1,100 மாணவ, மாணவியர் பங்கேற்று விளையாடினர்.
குறுவட்டப்போட்டிகளின் நிறைவாக தடகளப் போட்டிகள் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி
விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. போட்டியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கி.நிர்மலா வரவேற்றார். வட்டாரக்கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ, வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்தனர். வட்டாரக்கல்வி அலுவலர் ராஜாசந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்ஆர்.செல்வக்குமார், சிதம்பரம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வே.முருகேசன், தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. போட்டியில் வென்ற மாணவர்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தமிழாசிரியர் சுதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். போட்டிகளில் குறுவட்ட பள்ளிகளை சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் விளக்க நிகழ்வுகளும் நடைபெற்றன. உடற்கல்வி ஆசிரியர் பொன்மணி நன்றி கூறினார்.