அறந்தாங்கி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி திங்கள் கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அவர்களின் அறிவுரையின்பேரில், நகராட்சி எல்லைக்குள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் முன்மாதிரி வார்டுகளாகத் தேர்வு செய்யப்பட்ட வார்டு எண். 2, 6, 7, 10, 13, 17, 26 உள்ளிட்ட வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதில் 10-ஆவது வார்டில் நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் ஐடியல் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை நகராட்சி ஆணையர் இரா. வினோத் தலைமையில் அறந்தாங்கி சார்பு நீதிமன்ற நீதிபதி அமிர்தவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
வார்டு எண். 10 முழுவதும் மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் நோய்த் தொற்று கழிவுகள் மற்றும் இ-வேஸ்ட் தனித்தனியாகப் பிரித்து வழங்கவும், மழைநீர் சேகரிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்கும் குப்பைகளை அவர்களது இல்லத்தில் மக்க வைத்து உரமாகத் தயாரித்தல் தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் உரக்கிடங்கில் உரம் தயாரிப்பது தொடர்பாக செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.
பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் சுகாதார அலுவலர் த.முத்துகணேஷ், சுகாதார ஆய்வாளர் எஸ்.சேகர், நகர்ப்புற மருத்துவர் ராஜேஷ், வழக்குரைஞர்கள் ஜி.கண்ணன், ஆர்,.அருண்ராஜ் மற்றும் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.