புதுக்கோட்டை

ரூ.40 லட்சத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிப்புக் கூடம் திறப்பு

11th Aug 2019 04:43 AM

ADVERTISEMENT


  புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியான சண்முகா நகரில் ரூ. 40 லட்சத்தில் அமைக்கப்பட்ட திடக்கழிவுகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார். 
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிக்குள் நாளொன்றுக்கு சுமார் 70 மெட்ரிக். டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் 42 மெட்ரிக். டன் மக்கும் குப்பைகள்,  28 மெட்ரிக். டன் மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மக்கும் குப்பைகளில் இருந்து 19 மெட்ரிக். டன் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தந்த வார்டுகளுக்கு அருகிலேயே நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  சண்முகா நகரில் ரூ. 40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரக் கூடத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இக்கூடத்தில் 35, 37, 38, 39 ஆகிய நகராட்சி வார்டுகளின் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, நகரின் மற்ற பகுதிகளிலும் குப்பைகளைத் தரம் பிரிக்க 6 இடங்களில் இதேபோன்ற கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் க. பாஸ்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். 
இதில், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பரம்பூர் ஊராட்சி, கடம்பராயன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் தலா ரூ.4.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT