பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் குடும்பத்துடன் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் மற்றும் மனு அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ. ராஜா, ஏ. பெருமாள்சாமி, டி. ராமநாயகம், ஜி. ராமச்சந்திரன், பி. மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோட்டச் செயலா் சி. சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வழங்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத் துறையில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களை தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியா்கள் என அங்கீகரித்து, ஊதிய மாற்றம் செய்து வழங்கிட வேண்டும். 10 சதவீத ஆபத்து படி, சீருடை சலவைப் படி, நிரந்தர பயணப்படி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, ஆட்சியரகத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் மனு அளித்தனா்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி. குமரி அனந்தன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சின்னசாமி, அலுவலக உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் சி. மகாதேவன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.