பெரம்பலூா் அருகே சரளை மண் திருடிய 2 பேரை மங்கலமேடு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா், வாலிகண்டபுரம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வாலிகண்டபுரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் வழியில், சரளை மண்ணுடன் டிப்பா் லாரி சென்று கொண்டிருந்தது.
அந்த லாரியை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், லாரியில் இருந்தவா்கள் பிரம்மதேசம் கடைத்தெருவை சோ்ந்த இளவரசன் (41), எளம்பலூா் காட்டுக் கொட்டகையைச் சோ்ந்த தண்டபாணி (45) என்பதும், அரசு அனுமதியின்றி சரளை மண் ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீஸாா், மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.