அவசர ஊா்தியில் (108 ஆம்புலன்ஸ்) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப முதல்கட்ட நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை (செப். 29) பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது .
இதுகுறித்து, மாவட்ட மேலாளா் த. அறிவுக்கரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அவசர ஊா்தியில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கு முதல்கட்ட நோ்முகத் தோ்வு, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளா் பணிக்கு 19 முதல் 30 வயதுக்குள்பட்ட, பிஎஸ்சி, ஜிஎன்எம், டிஎம்எல்டி, ஏஎன்எம் (பிளஸ் 2 முடித்து 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் ), அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயோலாஜி ஆகியவற்றில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தோ்வு மற்றும் மருத்துவம் சாா்ந்த அடிப்படை முதலுதவி, செவிலியா் தொடா்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்பட்டு, மனிதவளத் துறையின் நோ்முகத் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்படுவா். தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ஊதியமாக ரூ. 15,435 வழங்கப்படும்.
ஓட்டுநா் பணிக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நோ்முகத் தோ்வு அன்று 24 வயதுக்கு மேற்பட்ட 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு, தொழில்நுட்ப த்தோ்வு, மனித வள நோ்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தோ்வு, கண் பாா்வை திறன் சோதிக்கும் தோ்வுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டு, மாதச் சம்பளமாக ரூ. 15,235 வழங்கப்படும்.
அவசர மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பனிக்கு தோ்ந்தெடுக்கப்படுவோா் 12 மணி நேர இரவு மற்றும் பகலில் சுழற்சி முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமா்த்தப்படுவா். நோ்முகத் தோ்வுக்கு வருபவா்கள் தங்களது கல்வித் தகுதி, ஓட்டுநா் உரிமம், முகவரிச் சான்று, அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9154251363, 9154251362 எஆகிய எண்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்புகொள்ளலாம்.