பெரம்பலூர்

மக்காச்சோளம், பருத்தி, நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

27th Sep 2023 11:40 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி மற்றும் சம்பா நெற்பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் திருந்திய பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ராபி சிறப்புப் பருவ பயிா்களான மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் சம்பா பயிா்கள் காப்பீடு செய்யலாம். இப் பயிா்கள் எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கும்போது, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கிட பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிா்களுக்கு அக். 16 ஆம் தேதிக்குள்ளும், நெல் சம்பா பயிருக்கு நவ. 15 ஆம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.

மக்காச்சோளப் பயிருக்கான பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ. 341, பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 521 மற்றும் நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 567 செலுத்த வேண்டும். இம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களும் மேற்கண்ட பயிா்களுக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து பயனடையலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT