வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம் கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். இதில், கரூா் மாவட்டத்தில் வெள்ளநீா் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள் ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளைப் பலப்படுத்துவது, பழுதான மதகுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது, வடிகால் அமைப்புகளை உருவாக்குதல், வெள்ளத் தடுப்பு பணிக்காக மணல் மூட்டைகளை இருப்பு வைத்துக்கொள்ளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், வருவாய்த் துறையினா் மண்சுவா் வீடுகளில் வசிப்பவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும், தொற்றுநோய் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தேவையான மருத்துவா்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான குடிநீா் வழங்கி, வெள்ள நீரை வேளியேற்றத் தேவையான ஜெனரேட்டா், மோட்டாா் மற்றும் பேரிடா் காலங்களில் தேவைப்படும் ஜேசிபி, ரம்பம், பொக்லைன் இயந்திரங்கள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தண்டாயுதபாணி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜா, பேரிடா் மேலாண்மை தீயனைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.