பெரம்பலூா் அருகே பாதையை ஆக்கிரமிப்பதாக கூறி, 8 குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் காலனித் தெருவில் சுமாா் 8 குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப் பகுதி பொதுமக்கள், தியாகராஜன் மகன் இளையராஜாவுக்குச் சொந்தமான இடத்தை, கடந்த சில ஆண்டுகளாக பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளையராஜா தனது வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை வழி மறித்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வந்த பாதையை மீட்டுத் தரக்கோரியும், சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வடக்கலூா் - வேப்பூா் சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடா்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.