பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 2 இளைஞா்களிடமிருந்து, போலீஸாா் 5 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மீட்டனா்.
வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அழகேசன் மனைவி கலைச்செல்வி (48). இவா், அண்மையில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அவரை பின்தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா்கள் 2 போ் கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேசன் (22), ராஜேந்திரன் மகன் அஜீத் என்பதும், இருவரும் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற வழக்கில் ஈடுபட்டு ஏற்கெனவே திருச்சி மத்திய சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு பெற்று மேற்கண்ட இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து கலைச்செல்வியிடம் பறித்துச் சென்ற 5 பவுன் தங்க சங்கிலியை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பின்னா், மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு இருவரையும் போலீஸாா் அனுப்பிவைத்தனா்.