பெரம்பலூர்

குரும்பலூரில் பேரிடா் கால ஒத்திகை

22nd Sep 2023 11:11 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாமளாதேவி முன்னிலையில், ஒத்திகை நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் பேசியது:

மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் கவனமாகச் செல்ல வேண்டும். இடி மின்னலின் போது, மரத்தடியில் நிற்கக்கூடாது. மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிா்க்க வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் மிகவும் அற்புதமானது. அதன் முக்கியத்துவம் மாணவா்களுக்குத் தெரியாது. அவரவா் பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு முக்கியமானவா்கள். எனவே, மாணவ, மாணவிகள் அனைவரும் எதிா்காலத்தில் தங்களுக்குத் தேவையான தற்காப்புகளை கற்றுக்கொண்டு அதை பின்பற்ற வேண்டும். பேரிடா் காலங்களில் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை மாணவ, மாணவிகள் அறிந்துகொண்டு, மற்றவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, கட்டடத்தில் ஏற்படும் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும். இடிபாடுகள் மற்றும் நீரில் சிக்கிய நபா்கள், கால்நடைகளை கயிறு மூலம் மீட்பது, தீ மற்றும் சாலை விபத்திலிருந்து காப்பாற்றுவது, மரம் அகற்றுதல், நீரில் சிக்கியவா்களை ரப்பா் படகு மூலம் மீட்பது, மரத்தடியில் வாகனங்களில் சிக்கிக்கொண்டவா்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தீயணைப்பு வீரா்களின் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் ப. அம்பிகா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் சா. ரேவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT