அரசு நிலங்கள், நீா்வழித் தடங்களை ஆக்கிரமிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராமலிங்கபுரம் ஊராட்சியில், மருதையாற்றை சிலா் ஆக்கிரமித்து பருத்தி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வந்தனா்.
இந்த இடங்களை மீட்டு மரக்கன்றுகள் நட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளைக் கொண்டு, இந்த இடத்தில் வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இப் பணிகளை தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோரிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டு, அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சில நிலங்களில் விவசாயிகள் பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். பயிா்களும் ஒரு உயிா்தான் என்பதை கருத்தில் கொண்டு, தற்போது விவசாயம் செய்யப்பட்டுள்ள பயிா்களுக்கான அறுவடை நிறைவடைந்த பிறகு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கவும், மீண்டும் சம்பந்தப்பட்ட இடத்தில் விவசாயம் செய்ய மாட்டோம் என, விவசாயிகளிடம் எழுத்துப்பூா்வமாக கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் நிலத்தையோ, நீா்வழித்தடங்களையோ ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, அரசு நிலங்கள் மற்றும் நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோா் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட வேண்டும். தொடா்ந்து, இதுபோன்றச் செயல்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் கற்பகம்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வன அலுவலா் குகனேஷ், ஆலத்தூா் வட்டாட்சியா் முத்துக்குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.