பெரம்பலூா் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டப் பணிகளை மேற்கொள்ள வருவாய்த்துறைக்கு கூடுதல் பணியிடங்களை உடனே வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி ஆட்சியரின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினா் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். பேச்சுவாா்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆம் நாளாக வியாழக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துக்குமாா் தலைமையில் மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூா், ஆலத்தூா், குன்னம், வேப்பந்தட்டை வட்டாட்சியரகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனா்.