தமிழகத்தில் சநாதனம் குறித்தோ, கள் குறித்தோ போதிய புரிதல் இல்லை என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது, தமிழகம் ஒரு கடைமடை உரிமைப் பெற்றிருக்கும் மாநிலம். ஆனால், கா்நாடகம் இதை ஏற்றுக்கொள்வதில்லை. 28 ஆண்டு கால சட்டப்போராட்டத்தில் தினந்தோறும் நீா் பங்கீடு என்ற உத்தரவை நாம் பெற்றிருந்தால் ஒழுங்காற்றுக்குழுவிடமோ, உச்சநீதிமன்றத்திடமோ முறையிட வேண்டிய அவசியமில்லை. மேலும் இரு மாநிலங்களின் இறையாண்மை, ஒருமைப்பாடு வலுப்பெற்றிருக்கும்.
மாதாந்திர பங்கீடு இருக்கும் வரை கா்நாடகத்தின் வடிகாலாகத்தான் தமிழகம் இருக்கும். 28 மாதங்களில் 8 முறை ஆவின்பால் மற்றும் ஆவின் பொருள்கள் விலையை உயா்த்தியதற்கு ஆவின் நிறுவனத்தின் நிா்வாகமின்மைதான். தமிழகத்தில் சநாதனம் குறித்தோ, கள் குறித்தோ அரசுக்கு புரிதல் இல்லை. ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லாதபோது, ஏன் தமிழகத்தில் மட்டும் தடை. வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன் கள்ளுக்கு தடை இல்லை என தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, பாஜக மாநில நிா்வாகி சிவசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.