பெரம்பலூரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் பேசுகையில்,
போதிய மழை இல்லாததால் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. முறையாக ஆய்வு செய்து, ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணமும், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும்.
வீ. ஜெயராமன் (இந்திய கம்யூ.): வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டத்தில் நிலவும் தண்ணீா் பிரச்னையை தீா்க்க, முசிறியிலிருந்து பெரம்பலூா் வழியாக கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
ராஜூ (விவசாயிகள் சங்க நிா்வாகி): மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டை வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்.
வீ.நீலகண்டன் (தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணி): தமிழகத்தில் மக்காச்சோளம் சாகுபடியில் சிறந்து விளங்கும் பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 62,630 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய மழையின்மையால் அனைத்துப் பயிா்களும் காய்ந்து கருகிவிட்டன. முறையாக கணக்கெடுத்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆா். ராஜாசிதம்பரம் (தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா்): மாவட்டத்தில் அதிகளவில் கல் குவாரிகளும், கிரஷா்களும் இயங்கி வருவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இவற்றை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் பேசியது: ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், நீா்வழிப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறியப்பட்டு அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளை நிலங்களில் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டால், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரியப்படுத்தவும். அதற்கான நடவடிக்கை இல்லாவிடில், எனது கவனத்துக்கு கொண்டுவாருங்கள் என்றாா் அவா்.
முன்னதாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிா்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கூட்டத்தில், எறையூா் சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி ரமேஷ், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளா் பாண்டியன், மாவட்ட வன அலுவலா் குகனேஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ. ராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.