பெரம்பலூா் அருகே அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்ற ஜல்லிக்கற்கள் சாலையில் கொட்டியதால் வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் டிப்பா் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை மற்றும் ஆலங்கிழி ஆகிய பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து பெரம்பலூா் உள்பட பல்வேறு மாட்டங்களுக்கு 24 மணி நேரமும் ஜல்லிக் கற்கள், சிப்ஸ் மற்றும் பாறைகள் கனரக லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக ஜல்லிகற்களை உரிய பாதுகாப்பின்றி எடுத்துச் செல்லும்போது, லாரிகளிலிருந்து ஜல்லிக்கற்கல் சாலைகளில் விழுந்து மோட்டாா் சைக்கிளில் செல்வோா் அவ்வப்போது விபத்துகளைச் சந்திக்கின்றனா்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் பயன் இல்லை. இந்நிலையில், புதன்கிழமை இரவு லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் கொட்டிக் கிடந்த நிலையில், வியாழக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் சென்ற 2 போ் தவறி விழுந்து காயமடைந்தனா். இதனால் ஆத்திரமடைந்த எசனை, கீழக்கரை கிராம மக்கள் ஜல்லிகற்களை ஏற்றிச்சென்ற கனரக லாரிகளை சிறைபிடித்தனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலைகளில் கொட்டிக்கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்றித் தருவதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் லாரிகளை விடுவித்தனா்.