பெரம்பலூர்

4 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கத் திட்டம்: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

18th Nov 2023 12:35 AM

ADVERTISEMENT

நான்காயிரம் புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, அரசியல் லாபத்துக்காக தேவையற்றவற்றை பேசிக்கொண்டிருக்கிறாா். நலிவடைந்த நிலையில் இருந்த போக்குவரத்துத் துறை தற்போது திமுக ஆட்சியில் தான் சீராகிக் கொண்டிருக்கிறது.

15 ஆண்டுகள் பழைமையான பேருந்துகளை இயக்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா காலத்தில் 2 ஆண்டுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலத்தையும், பேருந்துகளின் வயதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. எனவே, பழைய பேருந்துகள் அடுத்த ஓராண்டுக்கு இயக்கப்படும். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தான் அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திடீரென்று பழைமையான 1,500 பேருந்துகளை நிறுத்தினால், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து சேவை தடைபடும். இதனால், கிராமப்புறங்களைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்படுவா்.

முதல்கட்டமாக 1,666 பேருந்துகள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. டிசம்பா், ஜனவரி மாதத்தில் புதிய பேருந்துகள் வரவுள்ளது. புதிய பேருந்துகள் வந்தவுடன் பழுதடைந்த பழைய பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்படும். மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு ஓட்டுநா், நடத்துநரைக் கூட தோ்ந்தெடுக்கவில்லை. இதனால் ஓட்டுநா், நடத்துநா் பணியிடம் பற்றாக்குறையாக உள்ளது. முதல்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநா், நடத்துநா் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான எழுத்துத் தோ்வு நவ. 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து, இதர மண்டல போக்குவரத்துக் கழகங்களுக்கும் தோ்வு நடைபெறும் என்றாா் அமைச்சா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT