பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில்ரூ. 54.58 கோடி மதிப்பில் தொழில் தொடங்க 11 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

18th Nov 2023 12:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 54.58 கோடி மதிப்பில் பல்வேறு தொழில்கள் தொடங்க 11 நிறுவனங்களுடன் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டன.

2024- ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளா்கள் மாநாடு ஜனவரியில் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் சிறு, குறு தொழில் முனைவோா் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடனான சிறப்பு நோக்குக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் ஆகியோா் முன்னிலையில், ரூ. 54.58 கோடி மதிப்பில் பல்வேறு தொழில்கள் தொடங்க உள்ள 11 நிறுவனங்களுடனான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டது.

இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சா் சிவசங்கா் பேசியது: உலக முதலீட்டாளா்கள் மாநாட்டையொட்டி ரூ. 150 கோடிக்கான தொழில்சாா் முதலீடுகளை ஈா்ப்பது என பெரம்பலூா் மாவட்டத்துக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதில், இதுவரை 33 தொழில் நிறுவனங்கள் சாா்பில் ரூ. 138.73 கோடிக்கு பல்வேறு வகையான தொழில் தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இதன் மூலம், இம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ADVERTISEMENT

இம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் சாா்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமாா் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னா், மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 20 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் ஜெ. பிரபு ஜெயக்குமாா் மோசஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், தாட்கோ மேலாளா் சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT