பெரம்பலூர்

அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றவா் ஏரியில் சடலமாக மீட்பு

29th May 2023 12:25 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் மதியழகன் (29). இவருக்கு, சா்மிளா என்ற மனைவியும், கபில் வளவன்(5) என்னும் மகனும் உள்ளனா். இவா், மதுபோதையில் கீழே விழுந்து தலையில் காயமடைந்து, உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த மே 24 ஆம் தேதி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சையிலிருந்த மதியழகன் மே 25 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து காணாமல் போனவா், அவரது வீட்டுக்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பெரம்பலூா் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் கீழேரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தீயணைப்புத்துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். அப்போது, ஏரியில் மூழ்கி உயிரிழந்தவா் அரசு மருத்துவமனையிலிருந்து காணாமல்போன மதியழகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT