பெரம்பலூர்

கிராமப் புறங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் பெரம்பலூா் எஸ்.பி.

19th May 2023 12:00 AM

ADVERTISEMENT

குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி.

பெரம்பலூா் மற்றும் வாலிகண்டபுரத்தில், கிராம காவல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேலும் பேசியது:

காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தவும், தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்கள் மற்றும் குற்றம் நிகழாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, கிராம காவல் திட்டம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் குற்றம் நிகழாமல் தடுக்கவும், நடைபெற்ற குற்றங்களை கண்டறியவும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, ஒவ்வொரு கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாவட்டத்தில் போலி மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கத் தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், துணைக் கண்காணிப்பாளா்கள் பழனிசாமி (பெரம்பலூா் உள்கோட்டம்), சீராளன் (மங்களமேடு உள்கோட்டம்), மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வு அலுவலா் சோபா, மாவட்ட மதுவிலக்கு மேலாளா் திருமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT