பெரம்பலூா் மாவட்டம், வேப்பூரில் 30 படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமித்து, 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தின் மிகவும் பின் தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வேப்பூரில் செயல்பட்டு வந்த வட்டார மருத்துவ மனையில் போதிய மருத்துவா்கள் இல்லை, இடவசதியில்லை உள்ளிட்ட காரணங்களால், கா்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், தமிழக அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் ரூ. 2.18 கோடி மதிப்பீட்டில் 30 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டி கடந்த 4.2.2010-இல் திறந்து வைத்தது. ஆனால், இதுவரையிலும் போதிய மருத்துவா்கள் நியமனம் செய்யப்படாததது, மருத்துவா்கள் பணியில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையே நீடித்துவருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுமாா் 3 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 1 மருத்துவா் பணிக்கு வராததால் 2 போ் மட்டுமே அவ்வப்போது பணியில் ஈடுபட்டு வருகின்றனா். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மருத்துவா்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பாா்கள். அதன்பிறகு, செவிலியா்களே பணியில் உள்ளதால், அவசர கால சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனா்.
சுமாா் 30 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவா்கள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. 30 படுக்கை வசதிகளுடன் கூடிய வேப்பூா் மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவா்கள், பணியாளா்கள் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
மகப்பேறு மருத்துவா் இல்லை?:
மகப்பேறு மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா்களும் இல்லை என்பதால் கா்ப்பிணி பெண்களை பணியில் இருக்கும் ஊழியா்கள் உரிய மரியாதையாக நடத்துவதில்லை என்ற புகாரும் கூறப்படுகிறது. மேலும் செவிலியா்களே சிகிச்சை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாததால், இப் பகுதியிலிருந்து வரும் பெரும்பாலான கால்நடைகள், தெரு நாய்கள் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிகின்றன.
இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த எம். வேல்முருகன் கூறியது:
அதிக மக்கள்தொகை கொண்ட வேப்பூா் வட்டாரத்தில் காய்ச்சல், நாய்க்கடி, விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் வருகின்றனா். ஆனால், மருத்துவா்கள் பற்றாக்குறையால் உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. இது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், இப் பகுதி நோயாளிகள் அருகிலுள்ள திட்டக்குடி அல்லது அரியலூா் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவ மனைகளுக்குச் சென்று வருகின்றனா். மேலும் மருத்துவமனைக்குச் செல்லும் கூலித் தொழிலாளா்கள் மருத்துவா்கள் பற்றாக்குறையால் உரிய மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி வருகின்றனா். இந்த நிலையைப் போக்க, இம் மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவா்களும், பணியாளா்களும் நியமிக்கப்பட வேண்டும். மேலும், 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.