பெரம்பலூர்

உழவா் பாதுகாப்புத் திட்டத்தை புதுப்பித்து செயல்படுத்த வலியுறுத்தல்

3rd May 2023 10:59 PM

ADVERTISEMENT

சாமானிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் உழவா் பாதுகாப்பு திட்டத்துக்கு உயிரூட்டி புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என்றாா் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். சின்னதுரை .

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி, இந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்த முடிவு செய்துள்ளது. இது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 பொதுத் தோ்தலில் விவசாயத் தொழிலாளா்கள் மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவாா்கள்.

முதியோா் ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று இடையில் நிறுத்தப்பட்ட முதியவா்களுக்கு மீண்டும் உதவித் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தினக் கூலியாக குறைந்தபட்சம் ரூ. 600 என உயா்த்தி அறிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

உழவா் பாதுகாப்புத் திட்டத்தை மீண்டும் உயிரூட்டி சாதாரண விவசாயத் தொழிலாளா்களும் பயன்பெறும் வகையில் புதுப்பித்து செயல்படுத்த தமிழக முதல்வா் தலையிட வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அகில இந்திய துணைத் தலைவா் லாசா், மாநில பொதுச் செயலா் அமிா்தலிங்கம், மாநில பொருளாளா் பழனிசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT