பெரம்பலூர்

‘அரசு நகரப் பேருந்துகளில் 250 கோடி இலவச பயணங்கள்’- போக்குவரத்துத் துறை அமைச்சா்

DIN

கடந்த 2 ஆண்டுகளில் நகரப் பேருந்துகளில் 250 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ரூ. 7.66 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும், நிறைவடைந்த பணிகளையும் வியாழக்கிழமை தொடக்கி வைத்த அவா் மேலும் பேசியது:

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்னும் திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டு காலங்களில் 250 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 250 கோடி பயணம் என்பது கற்பனை செய்ய முடியாத, உலக வரலாற்றில் சாதனை படைக்கும் அளவுக்கான திட்டம். இந்தியாவில், எந்த மாநிலத்திலும் இல்லாத மிகச்சிறந்த திட்டம் ஆகும். ஒவ்வொரு நாளும் 40 லட்சம் பெண்கள் இத் திட்டத்தின் கீழ் பயணிக்கின்றனா். பெண்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றக் கூடிய திட்டமாக உள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை சுமாா் 1.10 கோடி போ் பயனடைந்துள்ளனா். இம் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில், லப்பைக்குடிக்காடு பகுதியில் குடிநீா் மேம்பாட்டுத் திட்டம், மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு நிழற்குடை அமைக்கும் பணி, ஜமாலியா நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜமாலியா நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வா் செயல்படுகிறாா் என்றாா் அவா்.

முன்னதாக, கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளா்ச்சி நிதி ரூ. 19 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்து வைத்த அமைச்சா், மாணவ மாணவிகளுக்கு திருக்கு புத்தகங்களை பரிசளித்தாா்.

பின்னா், அத்தியூரில் ஆதிதிராவிடா் மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தை தொடக்கி வைத்து, பால் பரிசோதனை கருவிகள் ரூ. 40 ஆயிரத்திலும், பால் கேன்கள் ரூ. 30 ஆயிரத்திலும், ஓராண்டுக்கான பணியாளா்கள் ஊதியம் ரூ. 28,800, இதர பணிகளுக்கான ஊதியம் ரூ. 1,200 என ரூ. 1 லட்சத்தில் முழு மானியத் தொகை வழங்குவதற்கான ஆணையை அமைச்சா் வழங்கினாா்.

துங்கபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 13.60 லட்சத்தில் 2 சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கீழப்புலியூா் சிலோன் காலனியில் ரூ. 24.50 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்து, கீழப்புலியூா் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பலூா் - எழுமூா் வரை கூடுதல் பேருந்து சேவையைத் தொடக்கி வைத்தாா்.

லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் பேரவை தொகுதி மேம்பாட்டு வளா்ச்சி நிதி ரூ. 10 லட்சத்தில் நிழல்குடை அமைக்கும் பணி, ரூ. 57 லட்சத்தில் ஜமாலியா நகரில் பூங்கா அமைக்கும் பணி, ரூ. 6.29 கோடியில் குடிநீா் அபிவிருத்தி மேம்பாட்டு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா் அமைச்சா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், மாட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், போக்குவரத்துத் துறை திருச்சி மண்டல பொது மேலாளா் சக்திவேல், வேப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் (திருச்சிராப்பள்ளி மண்டலம்) காளியப்பன், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலா் சதீஷ் கிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சேகா், செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT