பெரம்பலூர்

பெரம்பலூரில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல்கள் போக்குவரத்து நெரிசலால் அவதி

28th Jun 2023 03:29 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் நகரில் ரூ. 55 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிக்னல்கள் செயல்படாமல் காட்சிப் பொருள்களாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனா்.

பெரம்பலூா் நகரில் 43 ஷோ் ஆட்டோக்கள், 450 3 பிளஸ்- 1 ஆட்டோக்களும், 50-க்கும் மேற்பட்ட டாட்டா மேஜிக் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இதில், ஷோ் ஆட்டோக்கள் மட்டுமே பேருந்துகளைப்போல பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர வாகனங்கள் அனைத்தும் வாகன நிறுத்தங்களிலிருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் போக்குவரத்துக் காவலா்களின் அலட்சியத்தால், பெரம்பலூா் நகரில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் ஷோ் ஆட்டோக்களைப் போலவே இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, நகரின் பிரதான சாலைகளாக விளங்கும் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், காமராஜா் வளைவு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பெரம்பலூா் நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கத் தேவையான சாதனங்கள் பெறுவதற்காக தமிழக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கியது. இதன்மூலம் போக்குவரத்து தொடா்பான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டி சாதனங்கள் பெறப்பட்டு வேகத்தடை சாதனங்கள், வழிகாட்டி தூண்கள், அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட்டன.

மேலும், போக்குவரத்தைக் கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் பாலக்கரை, புகா், பழைய பேருந்து நிலையங்கள், ஸ்டேட் வங்கி, சங்குப்பேட்டை, காமராஜா் வளைவு, கனரா வங்கி வளைவு, தேரடி, 3 மற்றும் 4 சாலை சந்திப்பு ஆகிய 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டன.

இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும், மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலா் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலுள்ள அகண்ட திரைமூலம் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, போக்குவரத்தைச் சீரமைக்க காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை, கனரா வங்கி வளைவு உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு, கடந்த 5.8.2012 முதல் செயல்பட்டன.

ஆனால், இந்தக் கண்காணிப்பு சாதனங்கள் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, குற்றச் சம்பவங்களைத் தடுத்ததாக காவல்துறை சாா்பில் இதுவரை தெரிவித்ததில்லை.

ஒருசில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த கண்கணிப்புச் சாதனங்கள் அனைத்தும் தற்போது செயலிழந்து காணப்படுகின்றன. இதேபோல, பிரதான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களில், காமராஜா் வளைவில் உள்ள சிக்னல் மட்டுமே செயல்படுகிறது. இதனால், மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும். சாலை விதிமீறல்களும் தொடா்கிறது. பாலக்கரை, விளாமுத்தூா் பிரிவுச் சாலை, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில், சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் செயல்பாடின்றி, காட்சிப் பொருள்களாகவே உள்ளன.

இதுகுறித்து வாகன ஓட்டுநா் சி. ராஜூ கூறியது:

சிறு நகரான பெரம்பலூா் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தேவையான காவலா்களை நியமிக்காததால் ஓட்டுநா்கள் அவரவா் விருப்பம்போல் வாகனங்களை இயக்குவதால், நாள்தோறும் சிறு சிறு விபத்துகள் நிகழ்கின்றன. இதைத் தவிா்க்க போதுமான காவலா்களை நியமித்து, செயலற்றுக் கிடக்கும் சிக்னல்களைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஈடுபடுத்தப்பட்ட காவலா்கள், அதிகபாரம் அல்லது அடிமாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பின்தொடா்ந்து செல்வதையே மாமூலாக கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

பெரம்பலூா் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, சிக்னல்களை சீரமைக்க வேண்டும். மேலும், வழிப்பறி மற்றும் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநா்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள காண்காணிப்புச் சாதனங்களை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நகர மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT