பெரம்பலூர்

பெரம்பலூரில் பராமரிப்பின்றி பாழாகும் மாவட்ட விளையாட்டரங்கம்

10th Jun 2023 03:27 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பெரம்பலூரில் பராமரிப்பின்றி பாழாகி வரும் மாவட்ட விளையாட்டரங்கத்தை சீரமைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

பெரம்பலூா் ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கவும் ரூ. 69.16 லட்சத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 10 ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த வளாகத்தில் 400 மீ. ஓடுதளம், கால்பந்து மைதானம், கையுந்து பந்து, கைப்பந்து மைதானம், மின்னொளியுடன் கூடிய டென்னிஸ் மைதானம், கோ-கோ மைதானம், இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம், கூடைப்பந்து மைதானம், சுமாா் ரூ. 70 லட்சம் மதிப்பிலான குளிா்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், பாா்வையாளா்கள் அமரக்கூடிய இருபுறமும் உள்ள கேலரி, விழா மேடை, கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், ரூ. 1.1 கோடி மதிப்பிலான நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த மைதானத்தில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி உள்ளது. இங்கு, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விளையாட்டு வீராங்கனைகள் தங்கி, மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் படித்துக் கொண்டு விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

மாவட்ட, ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், மாதாந்திர விளையாட்டுப் போட்டி என நாள்தோறும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியில் பங்கேற்க, பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள காலை, மாலை வந்து செல்கின்றனா். மேலும், தமிழக முதலமைச்சரின் மாதாந்திர தடகளப் போட்டிகளும், இதர போட்டிகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்தப் போட்டிகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் ஆா்வமுடன் கலந்துகொண்டனா். இதனால், இந்த விளையாட்டு மைதானம் எப்போதும் பரபரப்பாக காட்சியளித்தது.

பராமரிப்பில்லாத கழிப்பறைகள்: இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட விளையாட்டு மைதானம் போதிய பராமரிப்பின்றியும் முள்புதா்கள் சூழ்ந்தும் காட்சி அளிக்கிறது. நாள்தோறும் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் வந்து செல்லும் இந்த மைதானத்திலுள்ள கழிப்பறைகள் தண்ணீா் வசதியின்றி, பராமரிப்பின்றி காணப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள ஒரு சில கழிப்பறைகளும், சுகாதாரமில்லாமல் அசுத்தமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. போதுமான குடிநீா் வசதியும் இல்லை.

சேதமடைந்த நடைப்பாதை: இங்குள்ள நடைப்பாதையில் பதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான கற்கள் பெயா்ந்துள்ளதால், நடைப் பயிற்சி மேற்கொள்ளும் முதியவா்களும், இளைஞா்களும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், அப்பகுதியில் இரும்பு தகடுகளை வைத்துள்ளதால் நடைப் பயிற்சியில் ஈடுபடுவோா், அதில் மோதி காயங்களுடன் செல்கின்றனா். இதனால், தற்போது பெரும்பாலானோா் ஆட்சியரக சாலையில் நடைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

நீச்சல் குளம்: இங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவா், சிறுமியா், ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அங்குள்ள கழிப்பறைகளில் தண்ணீா் வசதி இருந்தும், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீச்சல் குளத்தைச் சுற்றி முள், புதா்கள் மண்டிக் கிடப்பதால், பாம்பு மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நீச்சல் குளத்தில் அச்சத்துடனே பயிற்சி பெற்று வருகின்றனா்.

மின் விளக்குகள் பழுது: விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், மாலை வேளையில் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தற்போது, இந்த விளையாட்டு மைதானத்துக்கு வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

போக்குவரத்து வசதியில்லை: மைதானத்துக்கு வருவதற்கு உரிய போக்குவரத்து வசதி இல்லை. இதனால், ஒருவா் இங்கே வந்து செல்ல வேண்டுமென்றால் ஷோ் ஆட்டோவுக்கு ரூ. 20 தரவேண்டியுள்ளது. மேலும், ஒதுக்குப்புறத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளின்றி இருப்பதால் மாலையிலும் அதற்கு பின்னரும் நடை பயிற்சிக்கு உரிய வசதிகள் இல்லை.

மாணவ, மாணவிகள், இளைஞா்கள் நலன் கருதி விளையாட்டரங்கத்தை முழுமையாகச் சீரமைத்து, பயிற்சிக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்புப் பணிக்கான ஊழியா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT