பெரம்பலூர்

களரம்பட்டியில் தரிசு நிலத்தொகுப்புகளை கண்டறிய ஆய்வு

10th Jun 2023 11:20 PM

ADVERTISEMENT

 

 பெரம்பலூா் அருகேயுள்ள களரம்பட்டியில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் மூலம் தரிசு நிலத் தொகுப்புகளை கண்டறிவதற்கான ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை இணை இயக்குநா் (பொ) கீதா தலைமையில், களரம்பட்டி கிராம ஊராட்சியில் தரிசு நிலத்தொகுப்புகளை கண்டறிவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னா், திட்ட விழிப்புணா்வுக் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் கீதா பேசியது:

கிராமங்களில், ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மைத் துறை மற்றும் உழவா் நலன் சாா்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக, பெரம்பலூா் வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட கல்பாடி, சிறுவாச்சூா், களரம்பட்டி மற்றும் சத்திரமனை கிராம ஊராட்சிகளில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள பல்வேறு இடுபொருள்களை பெறுவதற்கு விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க, கிரென்ஸ் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் ரவிச்சந்திரன், வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT