பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழ் 16 பள்ளி மாணவா் விடுதிகள், 10 பள்ளி மாணவியா் விடுதிகள், 4 கல்லூரி மாணவா் விடுதிகள், 6 கல்லூரி மாணவியா் விடுதிகள் என மொத்தம் 36 விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவியா் சேரத் தகுதியுடையவா்கள்.
இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதி, எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித செலவினமுமின்றி சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்து அல்லது ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பங்களை பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூன் 15 ஆம் தேதிக்குள், கல்லூரி விடுதிகளுக்கு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.