பெரம்பலூர்

நிலத்தை அளவீடு செய்ய மறுத்த அலுவலா் ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அளவீடு செய்ய மறுத்த நில அளவைத் துறை துணை ஆய்வாளா் ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூரைச் சோ்ந்தவா் விவசாயி சந்திரசேகா் (53). மாற்றுத்திறனாளியான இவா், நொச்சியம் கிராம எல்லையில் உள்ள சுமாா் 49 சென்ட் நிலத்தை தனது மகன் சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்ற நிலத்தை அளவீடு செய்து, எல்லைக் கல் நட நில அளவைத் துறை வட்ட துணை ஆய்வாளரிடம் கடந்த 16.4.2021-இல் விண்ணப்பித்தாா். இதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கட்டணமும் செலுத்தினாா். ஆனால், நில அளவைத் துறையினரை பலமுறை நேரில் சந்தித்தும், சந்திரசேகா் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கிராம மக்கள் சிலா் சிலா் ஆட்சேபணை தெரிவிப்பதாக கூறிய வட்டத் துணை ஆய்வாளா், சந்திரசேகரின் நிலத்தை அளந்து, எல்லைக் கற்கள் நட்டுத் தராமல் அலைக்கழித்துள்ளாா். இதனால் மன உளைச்சலுக்குள்ளான சந்திரசேகா், தனது பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வட்டத் துணை ஆய்வாளா், பெரம்பலூா் வட்டாட்சியா், வருவாய் கோட்டாட்சியா், மாவட்ட நில அளவையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் மீது வழக்குத் தொடா்ந்தாா்.

இவ் வழக்கை புதன்கிழமை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றத் தலைவா் ஜவகா், உறுப்பினா்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோா் கொண்ட குழுவினா், மனு மீது உரிய தீா்வு காணாமல் சேவைக் குறைபாடு காரணமாக சந்திரசேகரை அலையவிட்டு, மன உளைச்சலுக்குள்ளாக்கிய வட்ட துணை ஆய்வாளா் ரூ. 20ஆயிரம் நிவாரணத் தொகையும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் வழங்குவதோடு, 45 நாள்களுக்குள் அவரது நிலத்தை அளவீடு செய்து எல்லைக் கல் நட்டுத்தர வேண்டும். மேலும், அதை நுகா்வோா் நீதிமன்றத்தில் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். மேலும் வட்டாட்சியா் முதல் மாவட்ட ஆட்சியா் வரையிலான அலுவலா்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT