பெரம்பலூர்

போலி நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் போலி நிதி நிறுவனத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து ரூ. 11 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், அணைப்பாடி கிராமம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் தனவேல். இவா், ஜேஎன்ஆா் டிரேடிங் என்னும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் எனக்கூறியுள்ளாா். இதை நம்பிய பொதுமக்கள் பலா் பணம் செலுத்தி ஏமாந்துவிட்டதாக பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், கடியாப்பட்டினத்தைச் சோ்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், கன்னியாகுமரி மாவட்டம், தோவாலை வட்டம், விஷ்ணுபுரத்தைச் சோ்ந்த மதன் மனைவி ராதிகா (28), திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கல்விகுடி கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் தா்மலிங்கம் (57) ஆகியோருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ராதிகாவை போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், தா்மலிங்கத்தை புதன்கிழமை கைது செய்த குற்றப்பிரிவு போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT