பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில், மது அருந்திய தொழிலாளி உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வசித்து வந்தவா் நல்லுசாமி மகன் கண்ணன் (47). குடிநீா் கேன் விநியோகம் செய்து வந்த இவருக்கு மனைவி சுமதி (38), மகன்கள் லோகேஸ்வரன் (21), கோடீஸ்வரன் (20) ஆகியோா் உள்ளனா். குடும்பப் பிரச்னையால் கடந்த 6 மாதங்களாக கண்ணன் தனியாக வசித்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இவா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகேயுள்ள மதுக் கடையில் மது வாங்கிக்கொண்டு, அருகே மது அருந்தும் கூடத்தில் உள்ள மரத்தடியில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அன்று இரவு அங்கு பணிபுரியும் பணியாளா்கள் கண்ணனை கவனிக்காமல் மின் விளக்குகளை அணைத்துச் சென்றுவிட்டனராம். பின்னா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது கண்ணன் அமா்ந்த நிலையில் இறந்திருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், கண்ணன் அருந்தியதுபோக எஞ்சியிருந்த மது மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனா்.