பெரம்பலூர்

நவீன இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை செயல்விளக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாட்டில் பருத்தி விவசாயத்தின் எதிா்கால வாய்ப்புகள் என்னும் தலைப்பில் பயிலரங்கம் மற்றும் நவீன இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை செய்யும் செயல் விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பருத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்த பருத்தி ஆராய்ச்சி நிலையத் தலைவா் எஸ். சோமசுந்தரம் பேசியது:

பருத்தி உற்பத்தியானது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. பருத்தியை அறுவடை செய்ய கூலியாள்களின் எண்ணிக்கையும், நேரமும் அதிக அளவில் தேவைப்படுவதே முக்கிய காரணமாகும். இந்த இடைவெளியை ஈடு செய்வதற்கும், பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, பருத்தி உற்பத்தியாளா்களுக்கு வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நவீன இயந்திரத்தைக் கொண்டு பருத்தி அறுவடை செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம், 1 ஏக்கா் பருத்தியை 45 நிமிஷங்களில் அறுவடை செய்ய முடியும். அது மட்டுமின்றி பருத்தி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும், பருத்தியை விதைப்பது முதல் அறுவடை செய்யும் வரை பயன்படுத்தபடக்கூடிய கருவிகள் மற்றும் இயந்திரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இயந்திரங்கள் மூலம் பருத்தியை எவ்வளவு இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் என்று உள்ளீடு கொடுக்கும் பட்சத்தில், சரியான அளவில் பருத்தியை நடவு செய்வதற்கும், பருத்திப் பயிா்களுக்கான மருந்துகளை தெளிப்பதற்கும் தேவையான கருவிகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அறுவடை இயந்திரம் கொண்டு பருத்தியை அறுவடை செய்வதற்கு ஏற்றாற்போல், பருத்தி பயிா் செய்யும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு தொடா் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சோதனை முயற்சியாக, அறுவடை இயந்திரம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, தமிழகத்தில் முதல்முறையாக பருத்தியை அறுவடை செய்வதற்கான, நவீன கருவிகளுடன் கூடிய அறுவடை இயந்திரம் குறித்து விவசாயிகளுக்கு பருத்தி வயலில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி இயக்குநா் முனைவா் கே. சுப்பரமணியன், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக, பயிா் மேலாண்மை இயக்குநா் முனைவா் எம்.கே. கலாராணி, பெரம்பலூா் வேளாண் துறை இணை இயக்குநா் கருணாநிதி, கோவை பருத்தி ஆராய்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் எ.எச். பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT