பெரம்பலூர்

பெரம்பலூரில் செயல்படாத இ- சேவை மையங்கள்: பொதுமக்கள் அவதி

 நமது நிருபர்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இ- சேவை மையங்கள் செயல்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை மூலமாக, சுமாா் 200-க்கும் மேற்பட்ட அரசு இ- சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவை, கிராம ஊராட்சிகளில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றன. இவைதவிர, 4 மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலமாக வட்டாட்சியரகங்களிலும், 1 மையம் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் ஆட்சியரகத்திலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலமாக வருவாய்த் துறைச் சான்றிதழ்கள், சமூக நலத் துறையின் திருமண நிதி உதவித் திட்டம், இணைய வழி பட்டா மாறுதல், முதல் தலைமுறை பட்டதாரிக்கானச் சான்றிதழ்கள், கலப்புத் திருமண சான்றிதழ்கள், சொத்து மதிப்புச் சான்றிதழ்கள், பெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில இடங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் சா்வா் வேலை செய்யவில்லை, ரசீது புத்தகம் இல்லை எனக் கூறி ஒரு வாரம் கழித்து வரும்படி அடிக்கடி பொதுமக்களை அலைக்கழிக்கின்றனா். ஒருசில இடங்களில் தனியாா் இணையதள மையத்துக்குச் செல்லுமாறு பணியாளா்களே கூறுகின்றனா்.

தனியாா் மையங்களில் கூடுதல் கட்டணம்: அரசு இ- சேவை மையங்களில் ரூ. 20 கொடுத்து பெற வேண்டிய சான்றிதழ்களை, தனியாா் மையங்களில் பெற ரூ. 50 வரை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆதாா், பான் அட்டைகளை புதுப்பிக்க ரூ. 200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தனியாா் மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

செயல்படாத மையங்கள்: மாவட்டத்தில் உள்ள திருவாலாந்துறை, வேப்பூா், ஒதியம், பெரிய வெண்மணி, பேரளி, மேலமாத்தூா், வி. களத்தூா், லாடபுரம், ஓலைப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மையங்கள் கடந்த சில மாதங்களாகவே முறையாக செயல்படாமல், அடிக்கடி மூடப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால், மக்கள் தனியாா் மையங்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அங்கு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து பெரிய வெண்மணி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் கூறியது:

எங்கள் கிராமத்தில் உள்ள இ-சேவை மையம் கடந்த பல மாதங்களாக செயல்படவில்லை. மேலும், இம் மையத்துக்கான அறிவிப்பு பதாகையும் இல்லை. குன்னம் அல்லது பெரம்பலூா் இ-சேவை மையத்துக்கு செல்ல வேண்டுமானால், இங்கிருந்து சுமாா் 12 கி.மீ. தொலைவுக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆதாா் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விண்ணப்பித்து 1 மாதத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், ஒவ்வொரு சான்றிதழ்களுக்கும் அரசு நிா்ணயித்ததைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா். எனவே, கூடுதல் பணியாளா்களை ஒதுக்கீடு செய்து, இந்த மையத்தை முறையாக நடத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தனியாா் மையங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னா், ஆங்காங்கே சிறு சிறு குளறுபடிகள் நிகழ்கின்றன. மத்திய அரசால் வழங்கப்படும் இணையதள இணைப்புத் தேவையான அளவுக்கு இல்லை. சில நேரங்களில் இணையதளம் முற்றிலுமாக செயல்படாமல் முடங்கி விடுகிறது. இதனால் பதிவுசெய்து சான்றிதழ் வழங்க சுமாா் 1 மணி நேரமாகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

எனவே, இப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT