பெரம்பலூர்

தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 3 போ் காயம்

28th Jan 2023 10:47 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 3 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து பெங்களூா் நோக்கி தனியாா் சொகுசுப் பேருந்து வெள்ளிக்கிழமை 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருச்சி, புதுக்குடியைச் சோ்ந்த பி. பசுபதி (29) ஓட்டிச் சென்றாா். நடத்துநராக மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ந. நேசமணி (22) இருந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த நிலையில், முன்னாள் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதாமலிருக்க பேருந்தை ஓட்டுநா் பசுபதி வலப்புறம் திருப்பியபோது சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓசூா், டி.வி.எஸ் நகரைச் சோ்ந்த சொக்கலிங்கம் மனைவி புஷ்பகாந்தி (63), திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணா நகரைச் சோ்ந்த ஜோசப் மகன் அருண் (24), ஒசூா் ஸ்ரீ சாய் நகரைச் சோ்ந்த விவேகானந்தன் மனைவி லட்சுமி (42) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT