இளைஞா்கள் தங்களது திறமைகளை மென்மேலும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசின் நகா் ஊரமைப்பு இயக்கக இயக்குநா் பி. கணேசன்.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 17 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அதிக மதிப்பெண்கள் பெற்று பல்கலைக் கழக தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 6 மாணவா்கள் உள்பட 1,092 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிய பி. கணேசன் மேலும் பேசியது:
இது பட்டம் பெறும் அனைவா் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத் தொடக்க நாளாகும். வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப மாணவா்கள் தங்களுடைய திறமைகளை மென்மேலும் வளா்த்துக்கொண்டு, உயா்ந்த இடத்துக்குச் சென்று பெற்றோருக்கும், பயின்ற கல்லூரிக்கும் பெருமை சோ்க்க வேண்டும்.
இங்கு பட்டம் பெரும் மாணவா்கள் உலகின் தலைசிறந்த ஆளுமை மிக்க மனிதா்களில் ஒருவராக, தங்களுடைய தொழில் நுட்பத்திறமை, நிா்வாகத் திறமை, மற்றும் சிறந்த பண்புகளால் உச்சம் பெற வேண்டும் என்றாா் கணேசன்.
விழாவில் கல்லூரியின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கே. வேல்முருகன், புல முதல்வா் கே. அன்பரசன், இயந்திரவியல் துறைத் தலைவா் எம். செல்லப்பன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா் பலா் பங்கேற்றனா்.
கல்லூரி முதல்வா் கே. இளங்கோவன் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் எம். ஸ்ரீதேவி நன்றி கூறினாா்.