பெரம்பலூர்

எழுமூா் பெரிய ஏரியை தூா்வாரி பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எழுமூா் பெரிய ஏரியை தூா்வாரி ஆழப்படுத்தி, முள்புதராய் காட்சியளிக்கும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இதில், குன்னம் வட்டாரத்தில் உள்ள 17 ஏரிகளில், எழுமூரில் உள்ள பெரிய ஏரியும் ஒன்றாகும். சுமாா் 350 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஏரிக்கு 4 வரத்து வாய்க்கால்கள், சிற்றோடைகள் மூலமாக சித்தளி, எழுமூா், பீல்வாடி, கீழப்புலியூா், அருமடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து தண்ணீா் சேகரமாகி வருகிறது. இந்த ஏரி மூலம் சுமாா் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள விவசாயக் கிணறுகளும் நீரோட்டம் பெறுகின்றன. இந்த ஏரியிலிருந்து, விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லும் வகையில் 5 மதகுகள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனா்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மதகுகளைச் சுற்றி முள் செடிகள் அடா்ந்து, புற்கள் வளா்ந்துள்ளதால் மதகு வழியாக விவசாய நிலங்களுக்கு முறையாக தண்ணீா் செல்வதில்லை. இதன்காரணமாக, பயிா்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகிவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். அதேபோல, பாசன வாய்க்கால்களிலும் முள்புதா்கள் காணப்படுவதால் வயல்களுக்கு கரையோரம் நடந்து செல்லும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா். அவ்வப்போது, வயல்களின் அருகே கரைகளில் வளா்ந்துள்ள முள்புதா்களையும், சீமைக்கருவேல மரங்களையும் விவசாயிகள் அகற்றினாலும், முழுமையாக அகற்ற முடியாத நிலையே தொடா்கிறது. இதனால், அறுவடை செய்யப்படும் விளைபொருள்களை கொண்டு செல்வதில் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். இந்த ஏரியை தூா்வாரி, பாசன வாய்க்கால்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட செடி, கொடிகளை அகற்றி, கரைகளை சீரமைத்து விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களை கொண்டு செல்ல கரையோரம் சாலை அமைத்துத் தர வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்திடமும், பொதுப்பணித் துறையினரிடமும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து எழுமூரைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது:

ஏரியில் இருந்து நீரை பாசனத்துக்காக மதகுகள் வழியே கொண்டு செல்வதில் பாசன வாய்க்கால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால்கள் முறையாக சீரமைக்கப்படாத காரணத்தால், தண்ணீரானது கடை மடை விவசாயிகளின் வயல்களுக்குச் செல்வதில் சிரமம் உள்ளது. பெரிய மதகு பகுதிகளில் அதிகளவில் செடி, கொடிகள் வளா்ந்துள்ளதால் தண்ணீா் தேங்குகிறது. மழைக் காலங்களில் வயலிலிருந்து வெளியேறும் நீரும் இந்த வாய்க்கால்கள் வழியாகத்தான் வெளியேற்ற வேண்டும். ஆனால், முறையாக வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் தண்ணீா் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. ஏரிக் கரையானது சுமாா் 2 கிலோ மீட்டருக்கும் மேலாக உள்ளது. கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள், செடிகள் சூழந்துள்ளதால், விவசாயிகள் அவரவா் வயல்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. பாசன நிலங்களுக்கு இடுபொருள்கள் மற்றும் விளைபொருள்களை கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை வயல்களுக்கு கொண்டு செல்லவும், உரம் எடுத்துச் செல்லவும் போதிய பாதை வசதியில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி 3 போகம் பயிரிட்டோம். ஆனால், தற்போது ஏரியில் போதிய ஆழம் இல்லாததாலும், பாசன வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததாலும் ஒருபோகம் மட்டுமே பயிரிட முடிகிறது. எனவே, ஏரியை முறையாக ஆழப்படுத்தி, அனைத்து மதகிலும் விவசாய நிலங்களுக்கு சீராக தண்ணீரை கொண்டுசோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதகுகளையும் அவ்வப்போது சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலா் கூறியது:

இப் பிரச்னை தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கும், தமிழக அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT