சிறப்புச் செய்திகள்

கர்நாடகத்தில் கலக்கிய தமிழக ஐஏஎஸ் அலுவலர்!

19th May 2023 01:44 PM

ADVERTISEMENT


சென்னை: கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்தாலும், தமிழ்நாடுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகர், முக்கிய கட்சி வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக மாறி பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ரேய்பாக் தொகுதியில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகர் (59) மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் அதாவது வெறும் 2,570 வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார்.

இவர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதுவும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி, 54,930 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துரியோதனன் மகாலிங்கப்பா 57,500 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

ஒருபக்கம் கர்நாடகத்தில், வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதன் அண்டை மாநிலமான தமிழகத்திலோ, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு,  ஷம்புவின் மனைவியும், நன்கு அறியப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியுமான பி. அமுதாவுக்கு அடுத்த உள்துறை செயலாளர் பதவியை வழங்கியது. இதுவரை அந்த பதவியை ஒருசில பெண் அதிகாரிகளே வகித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து அமுதா கூறுகையில், எனக்கு இந்த தேர்தல் முடிவு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அடுத்த முறை நிச்சயம் அவர் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

ஷம்பு கல்லோரிகர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, அரசியலில் நுழைந்தார். தனது சொந்த தொகுதியான பெல்காம் மாவட்டத்தில் உள்ள ரேய்பாக் தொகுதியில் களப்பணிகளைத் தொடங்கினார்.

இவரது தொகுதியின் முக்கிய பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே இருந்தது. ரேய்பாக்கின் யபராட்டி பகுதியைச் சேர்ந்த ஷம்பு, 1991ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு பொறுப்புகளில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்.

தேர்தலில் போட்டியிட்டது குறித்து ஷம்பு கல்லோலிகர் கூறுகையில், நான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் சீட்டு கேட்டேன். ஆனால் உள்கட்சி அரசியல் காரணமாக எனக்கு சீட்டுக் கொடுக்கவில்லை. எனவேதான் சுயேச்சையாக போட்டியிடுவது என்று முடிவெடுத்தேன். எனக்கு எந்த உள்கட்டமைப்பு வசதியோ, ஆதரவோ எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டேன் என்கிறார்.

எவ்வாறு இரண்டாம் வேட்பாளராக வந்தேன் என்பது குறித்து கல்லோலிகர் கூறுகையில், எனது ஆதரவுப் படையே பெண்களும் மாணவர்களும்தான். அவர்களுக்கு ஏதேனும் செய்ய நினைத்தேன், நல்ல தரமான கல்வி கிடைக்க உறுதியளித்திருந்தேன். இது மட்டுமல்லாமல், அனைத்து சமுதாய மக்களின் ஆதரவும் எனக்குக் கிடைத்ததே இந்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கக் காரணம் என்கிறார்.

விவசாயத்தை மேம்படுத்துதல், கிருஷ்ணா நதியிலிருந்து நீரைப் பெற்று 39 ஏரிகளில் நீர் நிரப்புதல், செவிலியர் கல்லூரி திறப்பது, பொறியியல் கல்லூரிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்வேன் என்று உறுதிமொழி அளித்திருந்ததாகக் கூறுகிறார்.

நான் இங்கு மக்களுடன் பணியாற்றவே வந்தேன். எனவே, இனி வரும் ஆண்டுகளிலும் நான் அவர்களுடனே இருப்பேன். ஏழை மக்களுக்குக் கிடைக்கும் கல்வி நல்ல தரமான கல்வியாக இருப்பதை உறுதி செய்ய உழைப்பேன். மக்களுக்கு சிறந்த உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT