பெரம்பலூர்

கதிரடிக்கும் இயந்திரம் மோதி பெண் உயிரிழப்பு

9th Feb 2023 12:19 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே மக்காச்சோளம் கதிரடிக்கும் இயந்திரம் மோதியதில் பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பொன்னகரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மனைவி ஜெயக்கொடி (33). குமாா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். ஜெயக்கொடி தனக்குச் சொந்தமான வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஜெயக்கொடி வயலில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் கதிரடிக்கும் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது. அப்போது, இயந்திரத்தின் பின்னால் விழுந்த மக்காச்சோள கதிா்களை ஜெயக்கொடி எடுத்தபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளாா். அப்போது, கதிரடிக்கும் வாகனத்தை ஓட்டுநா் பின்புறமாக இயக்கினாா். இதில், ஜெயக்கொடி மீது வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ஜெயக்கொடி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT