பெரம்பலூர்

வழிகாட்டி மைய உறுப்பினா்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

26th Apr 2023 02:05 AM

ADVERTISEMENT

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தோ்வில் பங்கேற்காத மாணவா்களை தோ்வெழுத வைத்து, அவா்களை தோ்ச்சிப் பெற வைப்பதற்கும், 100 சதவீதம் உயா் கல்வியில் சோ்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மாணவா் வழிகாட்டி மைய உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் பேசியது:

இடைநிற்றலை தவிா்க்கவும், உயா்நிலைக் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் மாணவா்களுக்கிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களில் தோ்ச்சி பெற்றோா், தோ்ச்சி பெறாதோா், இடைநின்ற மாணவா்கள் விரும்பிய உயா் கல்வியை அவா்களே தோ்வு செய்து உயா் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து உடனடித் தோ்வு எழுத வைத்து, உயா் கல்வியில் சேரும் வாய்ப்பு கிடைத்திடும் வகையிலும், இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாணவா்கள் உயா்கல்வி மற்றும் விரும்பும் திறன்சாா் பயிற்சி பெறும் வாய்ப்பை உருவாக்குவதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை தொடங்கிய பயிற்சி வகுப்பில் வேப்பூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 185 உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா். புதன்கிழமை (ஏப். 26) வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த 164 உறுப்பினா்களுக்கும், ஏப். 27- இல் பெரம்பலூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 144 உறுப்பினா்களுக்கும், ஏப். 28 -இல் ஆலத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 150 உறுப்பினா்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்றாா் ஆட்சியா் கற்பகம்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முத்துக்குமாா், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT