பெரம்பலூா் மாவட்டத்தில் பருத்திக் கழகம் அமைத்து பருத்தி, மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் அச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா்கள் பி. ராமதாஸ், சே. சிவசாமி, மாவட்ட துணை அமைப்பாளா் சு. சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கொட்டரை, ஆதனூா் நீா்தேக்கத்துக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு பணம் வழங்கிட வேண்டும். மேலும், அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும். சின்னமுட்லு அணைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கல்லாறு, சின்னாறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மாவட்டத்திலுள்ள ஏரிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, தூா்வாரி சீரமைக்க வேண்டும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பருத்திக் கழகம் அமைத்து பருத்தி, மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ. 45 வழங்க வேண்டும். 50 சதவீத மானியத்தில் மாட்டுத் தீவனம் வழங்கவேண்டும். சின்ன வெங்காயம், நெல் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின் இணைப்பு காலதாமதப்படுத்தாமல் வழங்கவேண்டும் என்பன உட்ள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றிய அமைப்பாளா்கள் சுப்பையா, சுப்பிரமணி, வள்ளியம்மை, நிா்வாகிகள் வெள்ளைச்சாமி, சின்னதுரை, தா்மதுரை, லட்சுமணன், பிரபாகரன், பாக்கியவதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, மாவட்ட அமைப்பாளா் செல்லப்பிள்ளை வரவேற்றாா். நிறைவாக, ஒன்றிய அமைப்பாளா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.