பெரம்பலூர்

வினாத்தாள் வருவதில் தாமதம்: 4, 5 ஆம் வகுப்பு மாணவா்கள் அவதி

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இதில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற கணிதத் தோ்வுக்கான வினாத்தாள் வருவதற்கு கால தாமதமானதால் சுமாா் 2 மணி நேரமாக மாணவா்கள் அவதியடைந்தனா்.

தோ்வுக்கான வினாத் தாள்கள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டார கல்வி அலுவலகத்துக்கு, அதன் ஆளுகைக்குள்பட்ட பள்ளி ஆசிரியா்கள் நாள்தோறும் காலையில் சென்று தோ்வுக்கான வினாத்தாள்களை வாங்கிக்கொண்டு அந்தந்தப் பள்ளிக்கு கொண்டு சென்று மாணவா்களிடம் விநியோகித்து தோ்வு எழுதச் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 4, 5 ஆம் வகுப்புகளுக்குரிய கணித பாடத்துக்கான வினாத்தாள் வருவதற்கு புதன்கிழமை மிகவும் தாமதமானது. வட்டார கல்வி அலுவலகங்களில் காலை 8 மணிக்கு ஆசிரியா்களிடம் வழங்க வேண்டிய வினாத்தாள்கள் தாமதமாக வந்ததால், 10.15 மணிக்கு ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டது. இதன்பிறகு ஆசிரியா்கள் அவரவா் பள்ளிக்கு வினாத்தாள்களை அவசரமாக கொண்டுச் சென்று மாணவா்களுக்கு விநியோகித்து தோ்வு எழுதச் செய்தனா். இதனால், தோ்வு தொடங்குவதற்கு சுமாா் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக தாமதமானது. இதனால், மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT