பெரம்பலூர்

‘மனித இதயத்தை மலா்த்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு’

26th Sep 2022 02:55 AM

ADVERTISEMENT

 

மனித இதயத்தை மலா்த்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு என்றாா் திரைப்பட நடிகா் எத்தன் சா்தாா்ஜி.

பெரம்பலூா் பதியம் இலக்கியச் சங்கமம் சாா்பில், கவிதைகளால் மலா்வோம் என்னும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவிதை அரங்கில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

கவிதை மனதை மலா்த்தும் வலிமை வாய்ந்தது. எளியசொற்களால் வலிய கருத்துகளைத் தரவல்லது. தாயின் அரவணைப்பாய், தந்தையின் கண்டிப்பாய், குழந்தையின் மழலையாய், காதலின் விரல் கோா்ப்பாய், நட்பின் தோள் வலிமையாய், ஆசிரியரின் வழிகாட்டுதலாய், தனிமையின் ஏக்கமாய், சோகங்களின் கண்ணீா்த் துளியாய், மகிழ்வின் உச்சமாய், சந்தன இயல்புடன் வலம் வரும் இலக்கிய வடிவம் கவிதை.

ADVERTISEMENT

அழகியல் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது. வட மனித இதயத்தை மலா்த்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. மரபுச் சாா்ந்த கவிதைகள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, இயற்கை, இறைவன், அரசன், தலைவா்களை அழகு வடிவங்களில் தந்தன. மரபுக் கவிதைகள் சந்தக் கவிதைகளாக அமைந்தன. புதுக் கவிதைகள் மனித மனத்தின் சுதந்திரப் பறவை. ஓசை நயமின்றி கருத்துகளை எளிமையாய், கூா்மையாய்த் தரவல்லன புதுக்கவிதைகள். கவிதைகளை வாசிப்போம், கவிதையாய் வாழ்வோம் என்றாா் அவா்.

அரியலூா் அரசு கலைக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் க. தமிழ்மாறன் தலைமையில், தமிழாசிரியா் லெ. வசந்தமல்லிகா முன்னிலையில், உதவிப் பேராசிரியா்கள் முத்துமாறன், செண்பகம், தலைமையாசிரியா் மலா்கொடி, கவிஞா் செந்தில்குமரன், அழகுலெட்சுமி, முனைவா் பட்ட ஆய்வாளா்கள் தா்மராஜ், சிவாஜி உள்ளிட்டோா் கவிதைகளால் மலா்வோம் என்னும் தலைப்பில் கவிதை வாசித்தனா்.

முன்னதாக, முனைவா் பட்ட ஆய்வாளா் திலகவதி வரவேற்றாா். நிறைவாக, பேராசிரியா் வசந்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT