பெரம்பலூர்

7ஆவது நாளாக தொடா்ந்த சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம்: 4 போ் மருத்துவமனையில் அனுமதி

7th Oct 2022 11:23 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியா்கள் தொடா்ந்து 7 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தின்போது, மேலும் 4 ஊழியா்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் 180 ஊழியா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், 28 பணியாளா்களை தனியாா் ஒப்பந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆள்குறைப்பு நடவடிக்கையாக கடந்த 30 ஆம் தேதி இரவு பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரியும் ஏஐடியுசி சங்க கிளைத் தலைவா் ஏ.ஆா். மணிகண்டன் தலைமையில், சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் கடந்த 1 ஆம் தேதி காலை முதல் தொடா்ந்து உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ், உணணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்றாா்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 ஊழியா்கள் மயக்கமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள் ஸ்டாலின், தா்மராஜ், அசோக்ராஜ், செல்வம் ஆகிய 4 பேரும் வெள்ளிக்கிழமை மாலை மயங்கி விழுந்தனா். இதையடுத்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுவரையில், தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஊழியா்கள் மயக்கமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT