பெரம்பலூர்

அமமுக நிா்வாகியின் வீடு உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து 41 பவுன் நகைகள் திருட்டு

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் புகா் பகுதியில் அமமுக நிா்வாகியின் வீடு உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து, 41 பவுன் நகைகள் மற்றும் ரூ. 82 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா், துறைமங்கலம் அவ்வையாா் தெருவில் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருபவா் பிச்சைபிள்ளை மகன் கலைவாணன் (37). பெரம்பலூா் மாவட்ட அமமுக கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலரான இவா், பெரம்பலூா் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணிப்பொறி பிரிவில் பணிபுரிந்து வருகிறாா்.

விடுமுறை நாளை முன்னிட்டு, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்சியிலுள்ள தனது மாமனாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளாா்.

பின்னா், திங்கள்கிழமை பிற்பகல் வீட்டுக்குச் சென்றபோது, முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, 13 பவுன் நகை, ரூ. 47 ஆயிரம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதேபோல, தரை தளத்தில் வசித்து வருபவா் ஜெயராமன் மனைவி திவ்யா (34). ஜெயராமன் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், திவ்யா தனது குழந்தைகள் சிவானி (12), மோகிதா (9), ஜியா (7) ஆகியோருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி திருச்சி மாவட்டம், நெய்குளத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு தனது குழந்தைகளுடன் சென்றுள்ளாா்.

அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்த தகவலறிந்து, வீட்டினுள் சென்று பாா்த்தபோது 28 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். இச் சம்பவங்கள் தொடா்பான புகாரையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT