பெரம்பலூர்

‘விடுதிப் பணியாளா்களுக்கு சிறப்பு ஈடு செய்யும் தொகை தேவை’

2nd Oct 2022 12:11 AM

ADVERTISEMENT

 

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதிகளில் பணியாற்றும் சமையல், காவலாளி மற்றும் ஏவலா்களுக்கு சிறப்பு ஈடு செய்யும் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதி பணியாளா்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கா. பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணிச் செயலா் லோ. மலா்க்கொடி, மாவட்ட பொருளாளா் ரெ. நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் த. காமராஜ், சங்க நிறுவனா் ஆ. தங்கவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினாா். கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான விடுதி சமையலா் மற்றும் காவலாளி, ஏவலா்கள் பணிமூப்புப் பட்டியலை வெளியிட்டு, கல்வித் தகுதிகேற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும். இம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பணியில் சோ்ந்த 27 விடுதிப் பணியாளா்களுக்கு காலதாமதமின்றி பணி வரன்முறை உத்தரவு வழங்க வேண்டும். விடுதி மாணவா்களின் நலன் கருதி அனைத்து விடுதிகளுக்கும் இரவு நேரக் காவலரை நியமிக்க வேண்டும். விடுதிக்கு குறைந்தபட்சம் தலா 2 சமையலா்களை நியமிக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதில் விடுதிப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். மாவட்டச் செயலா் ஜெ. மணிமாறன் வரவேற்றாா். மு. சின்னசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT