பெரம்பலூர்

கூடுதல் பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

1st Oct 2022 04:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி, அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இக் கல்லூரியில் கிராமப்புற மாணவா்களே அதிகளவில் உள்ளதால், பெரும்பாலானோா் அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனா். ஆனால், போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பல மாணவா்கள் கல்லூரிக்கு நடந்து சென்று வருகின்றனா்.

மேலும், பெரம்பலூா்- செட்டிக்குளம் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள் கல்லூரிக்கு எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்து வரும் மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தவும், மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், உரிய நிறுத்தத்தில் நிறுத்த வேண்டுமென அமைச்சா், மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து, நேரிடையாகவும், குறைதீா் கூட்டத்திலும் மனு அளித்து வருகின்றனா். ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவ்வழியேச் சென்ற அரசுப் பேருந்தில் மாணவா்கள் ஏற்ற மறுத்ததோடு, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தியும், அனைத்துப் பேருந்துகளும் கல்லூரி நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் கல்லூரி எதிரே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று மாணவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், முறையாக பதில் கிடைக்காததால் கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கல்லூரி முதல்வா் முகேஷ்குமாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதை தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டு மாணவா்கள் கலைந்து சென்றனா். இதனால், பெரம்பலூா்- செட்டிக்குளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT