பெரம்பலூர்

பெரம்பலூரில் கூட்டுறவு வார விழா: ரூ. 2.48 கோடி மதிப்பில் கடனுதவிகள்

19th Nov 2022 12:33 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 175 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பெரம்பலூரில் 69 ஆவது கூட்டுறவு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 51.65 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம் 13,12,717 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 26,547 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் ரூ. 53.39 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 542 விவசாயிகளுக்கு ரூ. 3.94 கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கணவரை இழந்த மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நிகழாண்டில் இதுவரை 595 பேருக்கு ரூ. 3.88 கோடி கடன் 5 சதவீத வட்டித் தொகையுடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், மாவட்ட அளவில் சிறப்பாக சேவை புரிந்து வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பொது விநியோகத் திட்ட நியாயவிலைக்கடை கட்டுநா்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும், 698 பயனாளிகள், 175 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு சுயத் தொழில் தொடங்க, கறவை மாடுகள் வாங்குவதற்கு என பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 2.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சா் சிவசங்கா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந் நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் ந. அங்கையற்கண்ணி, திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா் ஒன்றிய பொது மேலாளா் அ. பெருமாள், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க. பாண்டியன், திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் தா. அரசு, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கே.கே. செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT