கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதிய ஓய்வூதியம் ஒழிப்பு இயக்கத்தினா் பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபயணத்தில் ஈடுபட்டனா்.
இந்த நடைபயணத்துக்கு, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தொடங்கிய நடை பயணத்தை, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் இ. மரியதாஸ் தொடக்கி வைத்தாா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணம் ஆட்சியா் அலுவலகம் எதிரே நிறைவடைந்தது.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அன்புராஜ், இணை ஒருங்கிணைப்பாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.